சுமார் எழுவத்தியைந்து வருடங்களுக்கு முன் சென்னை புரசவாக்கத்தில் தி.ந.சேடாச்சலம் என்ற வழக்கறிஞர் தனது வக்கீல் வேலையில் ஈடுபடாமல் தமிழ் இலக்கியத்தில் ஆர்வம் கொண்டு கலாநிலயம் என்னும் வார பத்திரிகையை துவக்கினார். அதில் கம்பராமாயணத்திற்குத் தனியிடம் கொடுத்து வாராவாரம் அவர் அதற்க்கு உரை எழுதினார். அவ்வுரைகளிருந்து சில சுவையான பாகங்களை அவரது புதல்வர் இராதாகிருஷ்ணன் ஒரு கட்டுரையாக எழுதி அவரது தங்கை பார்வதியை கம்பன் விழாவில் படிக்கச் செய்தார். அக்கட்டுரையை நான் இங்கே blog செய்திருக்கிறேன்.
தமிழ் இலக்கியம் ஓர் அழகிய பூஞ்சோலை. மன்னன் செய்த பெரும்பிழை ஒன்றுக்காக மதுரை மாநகரத்தையே எரித்த ஓர் பத்தினிப் பெண்ணின் சாகசச் செய்கைகளோடு கமழும் சிலப்பதிகாரம் என்னும் புஷ்பம் சோலையின் வலது புறத்தில் நறுமணம் வீசிக்கொண்டிருக்கிறது. ஈற்றடிகளில் உலக்கத்தைச் சுருக்கி உண்மையை வெளிப்படுத்தும் திருக்குறள் என்னும் புஷ்பம் நம் கவனத்தை சோலையின் இடதுபுறத்திற்கு இழுத்துச் செல்கிறது. சோலையின் உட்புறத்தில் சில கொடிகளில் தங்கியிருக்கும் தேவாரம், திருவாசகம் போன்ற குயில்கள் எம்பிரானின் நிரந்திர கீதத்தை இணையிலா சப்த ஜாலங்களுடன் பாடிக்கொண்டிருக்கின்றன. நம் உணர்வோடு கருத்தையும் அழித்து உள்ளமெல்லாம் கொள்ளைகொள்ளும் வசீகரசக்தி அப்பாடல்களுக்கு இருந்ததென்றால் அது மிகையுரையாகாது. சோலை முழுவதும் பார்த்துவிட வேண்டும் என்னும் அவா முன்னே செல்ல, அதைத்தொடர்ந்து நாம் பின்னே செல்கையில் பல வர்ணங்களோடு கூடிய இலைகளும், பூக்களும் நிறைந்த ஒரு பெரிய மரமொன்று சோலையின் மத்தியில் தன்னேரில்லாத் தனிப் பெருமையோடு திகழ்வதைப் பார்த்து மேலே கடந்து செல்ல இயலாமல் அயர்ந்து நின்று விடுகிறோம். அம்மரத்தின் உச்சி வானத்தைப் பிளந்து சென்று மேக மண்டலமெல்லாம் சஞ்சாரம் செய்து தேவலோகத்தையும் எட்டிப்பிடித்து விடுகின்றது. அம்மரத்தின் வேர்கள் இவ்வுலகெல்லாம் ஊடுருவிச் செல்கிறது. அம்மரத்தின் கிளைகள் மற்றைய இலக்கியச் செடிகளையெல்லாம் தங்களின் நிழலில் அடக்கி விடுகின்றன. அதன் வனப்பை அனுபவிக்கின்ற நாமோ நாம் என்னும் அத்தனித் தன்மையெல்லாம் கரைந்து உருகி கலை மயமாகி நின்றுவிடுகிறோம்.
நம்மை அறியாமலேயே ஓர் உணர்ச்சி நம்மை அம்மரத்தின் அருகே இழுத்துச் செல்கிறது. பொன்னெழுத்துக்களால் பொதிக்கப்பட்டிருக்கும் ஒரு வார்த்தை அடிமரத்தில் சற்று மழுங்கியிருந்த போதிலும் "கம்பராமாயணம்" அம்மரத்தின் பெயர் என்பதை அறிந்து கொண்டோம். ஆஹா! காவியப் பூஞ்சோலையின் இணையில்லா மரமொன்றின் பெருமையெல்லாம் அறிவதற்குரிய அவகாசம் வந்து விட்டது என்று நம் மனம் துடிக்கிறது. ஆர அமர்ந்து நம் கலையுணர்வுக்கு ஏற்றவாறும், அறிவிற்கு எட்டுமளவும் அதை அனுபவித்தோம். வெளியே திரும்பி வரும்போது சில மலர்களையும் பறித்து எடுத்துக் கொண்டு வந்தோம். அவற்றில் சிலவற்றை இப்பொழுது நுகர்வோம்.
உலக சரித்திரத்தில் எல்லா தேசங்களிலும் கவிவாணர்கள் தோன்றி மறைவதுண்டு. அவர்கள் மறைந்தபோதிலும் அவர்கள் நூல்கள் வழ்ங்கி வருகின்ற காரணத்தால் அவர்கள் பெயர்கள் நிலைனாட்டப்பெருகின்றன. சாதாரணமாக ஒர் உலகமகாகவியின் வாழ்க்கையில் விநோதமோ விபரீதமோ இருக்கவேண்டுமென்ற நியதி இல்லை. ஒரு சிலர் செல்வத்திலே பிற்ந்து இன்ப வாழ்க்கை நடத்தியிருக்கலாம். பெரும்பாலோர் ஏழ்மையில் பிறந்து, துன்பத்திலே வளர்ந்து கடைசியாக மன்முடைந்து மாண்டு போயிருக்கலாம். இவ்வாறு கவிஞர்களின் வாழ்க்கையில் வேற்றுமை இருப்பது கவிஞருக்கே உரியதன்று. இது மனித வாழ்க்கைக்கே உரியது. ஆகவே கவிகளின் வாழ்க்கையை ஆராயப் புகுந்து சில சுவையற்ற வரலாறுகளைத் தெரிந்து கொள்வதில் யாதொரு பயனுமில்லை, காலம்தான் வீண்.
கம்பனைப் பற்றி அவன் எழுதிய இராமாயணத்தைத் தவிர வேறொன்றும் தெரியாதிருப்பது ஆராய்ச்சியாளருக்கு ஒரு சிறிது ஏமாற்றமளிக்கலாம். ஆனால் கவிச் சுவையைப் பயில்வோருக்கு இது ஒரு நல்ல காலம் என்றுதான் நினைக்க வேண்டியிருக்கிறது. சுமார் ஆயிரம் ஆண்டுக்குமுன்னர் கம்பன் தமிழ்நாட்டில் ஓர் ஒப்புயர்வற்ற ஓவியப் புலவறாய்த் திகழ்ந்தான் என்ற முகவுரையைத் தவிர வேறு அவன் வாழ்க்கை விவகாரங்களைப் பற்றி பேச முன்வருவதெல்லாம் வீண் வம்பு ஆவதோடு வழக்காகவும் முடியலாம்.
கம்பன் காவியத்திற்கு நிகர் காவியத்திற்கு நிகர் காவியக் கடலையே துழாவினாலும் மற்றொன்றைக் காண முடியாது. கிரேக்க நாட்டு வித்தகர் ஹோமர் எழுதிய "ஆடிஸி" என்ற கதையும், இத்தாலிய தேசத்து பெரும்புலவன் வர்ஜில் எழுதிய "ஈனிட்" என்ற காவியமும் இங்கிலாந்து தேசத் தவப்புதல்வனான் மில்டன் எழுதிய துறக்க நீக்கம் "Paradise Lost" என்ற இதிகாசமும் கம்பராமாயணத்தின் முன் விளையாட்டுக் கதைகளாக அமைகின்ற தன்மையை ஆங்கிலமும், தமிழும் கற்றவர்கள் அறிவார்கள்.
கோசல நாட்டின் இயல்பை வர்ணிக்கின்ற கம்பன் மனத்தில் இணையில்லா இன்பமே நிறைந்த ஒரு வாழ்க்கையின் நிகழ்ச்சியே உதித்திருக்க வேண்டும். செல்வ வாழ்க்கைக்கு அங்காந்து நிற்காமல் வாழ்க்கையே செல்வம் என்று கொண்டு அம்மக்கள் வாழ்ந்தார்கள் என்னும் போது, அதனைப் புரிந்து கொள்ளும் மன்மேனும் பெற்றிருப்போம் என்றால் அதுவே பெரிது.
"கொள்வார் இலாமை கொடுப்பாருமில்லை
கள்வர் இலாமை ஊர் காவலருமில்லை"
என்று இரண்டடிகளில் வாழ்க்கையின் வேதாந்தத்தையே விளக்குவான் என்றால் கம்பனின் கவித்திறனுக்கு வேறு என்ன சான்று வேண்டும்?
மானத தத்துவத்தின் இரகசியங்களையெல்லாம் சேர்த்து வைத்திருக்கும் ஒரு சாத்திரக் களஞ்சியம் இக்கம்பராமாயணம். மனதில் ஏற்படும் மாறுதல்களில் மிகவும் நுட்பமான ஓர் கட்டத்தைக் கைகேயி வரங்கள் கொள்ளும் இடத்தில் அருமையாக வெளிப்படுத்துகிறாள். உடலோடு உள்ளமும் கோடிய கூனிதன் தீய உரைகளுக்கெல்லாம் சிந்தை திரிந்து போகாமல் தாயன்பிலேயே தழைத்து ஓங்கியிருந்த கைகேயி இறுதியில் இமையவர் செய்த மாயத்தால் மனம் மாறி
"ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்சேய்
உலகாள்வது, மற்றொன்றால் சீதை கேள்வன் வன்மாள்வது"
என்று கண்வனிடம் வரங்களை வற்புறுத்திக் கேட்டபோது இராமனின் வன்வாசத்துக்குக் கால எல்லை வகுக்கவில்லை. ஆனால் இராமனை நேரில் கண்டு தந்தை கட்டளையை வெளிப்படுத்தும் போது, கைகேயியின் வாயில்
"ஆழிசூழ் உலகமெல்லாம் பரதனே ஆள, நீ போய்
தாழிருஞ் சடைகள் தாங்கி, தாங்கரும் தவமேற்கொண்டு
பூழிவெங்கானம் நண்ணி புண்ணிய துறைகளாடி
ஏழிரண்டாண்டில் வா என்றியம்பினன் அரசன்"
என்ற வார்த்தைகளே வெளிவருகின்றன. விரோதியை வனத்திற்கனுப்பும் வார்த்தைகளா இவை? தேச சஞ்சாரம் செய்ய புறப்படும் காதல் மைந்தனை ஆசி வார்த்தை கூறி அனுப்புவது போலன்றோ தொனிக்கின்றது? "நீ போய்" என்று தொடங்கி "வா" என்று முடிப்பது மிகவும் அருமையாக் அமைகின்றது.கண்டவுடன் கவலையெல்லாம் அகலவைக்கும் எம்பிரானின் முகத்தை நேரில் கண்ட பின்னர் "அடவியில் அழிந்து போ" என்று சொல்ல யாருக்குத்தான் மனம் வரும்? நிலையொன்று நிற்க மனமொன்று எண்ண வாயொன்று பிதற்றுதல் மனித வாழ்க்கையில் என்றுமே புதியது அன்று.
பன்னீராயிரம் பாடல்கள் அமைத்த இம்மாபெரும் காவியத்தை முன்னுக்குப் பின் முரண்படாமல் அமைத்த திறமையாலும், கதாபாத்திரம் ஒவ்வொரும் தமக்கேயுரிய தனிச்சிறப்போடு திகழ்வதாலும், நவரசங்களோடு கூடிய நாடக நிகழ்சிகளை நல்கிய பெருமையாலும் கம்பன் தனக்கேயுரிய தனியிடத்தை தேடிக்கொள்கிறான். இவை எல்லாவற்றிக்கும் உதாரணம் காட்டுவத் இப்பொழுது இயல்வதன்று.
ஆனால் கம்பன் நாடகத்தை நடத்தி வைக்கும் திறமைக்கு ஒர் உதாரணம் காட்டுவது மிகையாகாது. இன்பரசத்தோடு கூடிய நாடகங்களைகாட்டிலும் அவலச் சுவையை அதிகப்படுத்தும் நாடகங்களே மாந்தர்களின் மனத்தை மாற்றி அமைக்க வல்லன என்பதை எந்நாட்டிலும் எக்காலத்திலும் கற்றரிந்தவர்கள் உணர்வார்கள். நாடகப்புலவர் என்ற தொடருக்கே மருபெயர்போல் விளங்கிவரும் ஆங்கில நாட்டு மகாகவி ஷேக்ஸ்பியர் எழுதிய நாடகங்களுள் ஹாம்லெட், மாக்பெத், ஒதெல்லோ போன்ற துன்பவியல் நாடகங்களே மிகச் சிறந்தவைகளாக கருதப் படுகின்றன. அந்க ஷேக்ஸ்பியருக்கு நிகர் நானொருவன் உளேன் என்று விவாதம் செய்வது போல் கம்பர் தனது வாலிவதைப் படலத்தை நடத்திக் காட்டுகிறார்.
தேவாசுர யுத்தத்தின் போது தேவர்களின் உயிரையும் மானத்தையும் ஒருங்கே காக்க எண்ணி தன் தோள்வலியாலேயே கடலைக் கடைந்து அதிலிருந்து எழுந்த அமுதம் முழுவதையும் அத்தேவர்களுக்குக் கொடுத்த வானர வீரனாம் இவ்வாலி அவ்வமுதத்தில் அவன் ஒரு சிறிதும் அனுபவிக்கவில்லை. ஆகவே வீரனுமன்றி வள்ளலும் ஆகின்ற ஒர் உத்தமன். இவனைப் போய் இராமன் ஒரு விலங்கை வேட்டையாடுவதுபோல் மறைந்து நின்று கொன்றொழித்த வரலாறு படிப்பவர்களின் அவலச்சுவையை அதிகப்ப்டுத்துகின்றது. துன்பவியல் நாடகநிகழ்ச்சிகளின் நுண்மைகளையெல்லாம் நன்குணர்ந்த கவிஞன், வாலியின் துயரத்தின் மிகுதியால் நம் உணர்வெல்லாம் அழிந்து
போகாவண்ணம் ஒரு சூழ்ச்சி செய்து தன் கலைத்திறனை வெளிப்படுத்துகிறான். என்றுமிலா உற்சாகத்துடன் தன்னைப் போருக்குக் கூவியழைக்கும் தம்பி சுக்கிரீவனை அடித்துத் துரத்திவிட்டு வருகிறேன் என்று மனைவி தாரையிடம் விடைபெற்றுச் சென்றதாக வான்மீகீ இராமாயணம் வரைகின்றது. ஆனால் கம்பனின் வாலி "அச்சுக்கிரீவனைக் கொன்று அவன்தன் இரத்தத்தைக் குடித்துவிட்டு வருவேன்" என்று குரூர வேகத்துடன் போருக்குச் சென்றான். மேல் நோக்காக காண்பவர்களுக்கு இந்த இரண்டு வாலிகளுக்கும் இடையே உள்ள வேற்றுமை எளிதில் புலப்படா. மகா உத்தமனான வாலியைக் கொன்றழிக்கும் நிகழ்ச்சியில் இருக்கின்ற துன்பத்தின் மிகுதியைச் சிறிது தணிக்கும் பொருட்டு தம்பியின் உயிருக்கு உலைவைக்கும் வாலியைக் கம்பர் காட்டுகிறார்.
தங்களின் கவிதா சக்தியின் வன்மையால் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் சக்தி வாய்ந்தவர்கள் கலையின் செல்வர்கள். அவ்வளவோடு நில்லாமல் நம்முன் தெய்வசிந்தனையை வளர்க்கும் நீர்மையால் கம்பன் கவியரசனாகின்றான். சீதையின் அவயவங்களை வருணிக்கும் கட்டத்தில் கடவுள் இருக்கின்றரோ இல்லையோ என்று சிலர் அயிர்ப்பதுபோல் அவளுடைய நுண்ணிய இடையைக் காணாது சிலர் அயித்தார்கள் என்னுமிடத்து பிராட்டியின் இடையில் பரம்பொருளின் தன்மையை காட்டி, விளையாட்டிலும் வேதாந்தமே பேசும் ஒரு கலைஞனின் கடவுள் பக்திதான் என்ன!
கம்பராமாயணத்தின் ஒவ்வொரு செய்யுளும் தனித்தனி இரத்தினங்கள். சொற்களின் அமைப்பிலும், கூறவருகின்ற கருத்தின் ஆழத்திலும், பொருள் நயத்திலும், ஓசை இன்பத்திலும் அச் செய்யுட்களுக்கு நிகர் அவைகளே.
கம்பன் கவிதையைப் படித்துணர்ந்தவர் உய்ந்தார். அரசியல் வாதங்களும், கட்சிச் சச்சரவுகளும், சுதந்திரத்திற்கும், சமத்துவத்துக்கும் நடக்கும் போராட்டங்களும் நம்முள் இருக்கும் கலையுணர்வை அழித்து விடுகின்றன.
ஆம்! கம்பன் பிறந்த நாடாக இருந்தது போதும்!
கம்பனைப் படிக்கும் நாடாக இருத்தல் வேண்டும்.
திருகுறளை அயல் மொழிகளில் மொழி பெயர்த்ததால் நாம் எய்திய பெருமை போதும்!
அந்நூலை நாம் தமிழில் படிக்கும் திறமை வேண்டும்!
ஆரம்பக்கல்வி, உயர்தரக்கல்வி, ஆண்கல்வி, பெண்கல்வி இவற்றின் அவசியங்களைப் பற்றிக் கேட்டதெல்லாம் போதும்!
கற்றதனால் ஆனபயன் வாலறிவன் நற்றாள் தொழுவதின்றி வேறில்லை எனத் தேர்வதற்கு அவகாசம் வேண்டும்!
சுதந்திரம் பெற முயல்வது போதும்!
நாம் ஒருவரும் அதனை இழந்திருக்கவில்லை என்ற உண்மையை உணர்தல் வேண்டும்!
சமத்துவத்திற்கு மன்றாடும் சச்சரவு போதும்!
வேற்றுமை இல்லை என்ற வேதாந்தம் வேண்டும்!
வர்த்தகவளர்ச்சி போதும்!
ஆன்மாவை விற்காதிருக்க வேண்டும்!
இருக்கின்ற செல்வம் போதும்!
உள்ளதெல்லாம் உவந்தீயும் வள்ளியோர் ஆதல் வேண்டும்!

No comments:
Post a Comment